கடந்த மாலை (09ம் திகதி) நடைபெற்ற இன்டக்கிறிட்டி ஐக்கன் 2019 விருதினை மத்துகமை புனித மரியாள் கல்லூரியின் அதிபர் செல்வி P.A.C. பிரியதர்சினி பொதுமக்களால் அளிக்கப்பட்ட 20,000 மொத்த வாக்குகளில் அதிகூடிய SMS வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடினார். இவருடன் இன்டக்கிறிட்டி ஐக்கன் 2019 இக்கான இறுதிச்சுற்றுக்கு திரு A.M.A.S அமரசிங்க, உதவி அத்தியட்சகர் இலங்கை சுங்கத்திணைக்களம், திரு B.K.P. சந்திரகீர்த்தி, பணிப்பாளர், கரையோர வளங்கள் பாதுகாப்பு மற்றும் கரையோர முகாமைத்துவத் திணைக்களம், திரு K. குணநாதன், பிரதேச செயலாளர், வெருகல், திருகோணமலை, வைத்தியக்கலாநிதி T.சத்தியமூர்த்தி பணிப்பாளர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் ஆகிய நால்வரும் தெரிவாகியிருந்தனர்.
செல்வி. பி.ஏ.சி. பிரியதர்சினி – அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதில் இடம்பெறுகின்ற ஊழல் முறைகேடுகள் சாதாரண பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். மத்துகம புனித மரியாள் கல்லூரியின் அதிபர் பிரியதர்ஷனி அவர்கள் இவ்வாறான ஊழலை தவிப்பதற்காகவும் இல்லாதொழிப்பதற்காகவும் வெளிப்படைத் தன்மையுடனான புள்ளி வழங்கல் முறையினை பின்பற்றுகின்றார். இதனால் அப்பிரதேச மக்கள் மத்தியில் நன்மதிபைப் பெற்றதோடு, அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாது செயற்பட்டதனால் பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. இவர் கிடைக்கின்ற வளங்களைக் கொண்டு மிகவும் செயற்றிறன்மிக்கவகையில் ஈ போர்ட் பாவனையூடான கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தியதோடு விளையாட்டிலும், கற்றல் செயற்பாடுகளிலும் பாடசாலையின் அபிவிருத்திக்காக தன்னை அர்பணித்த இவர் கௌரவத்திற்குரியவர்.
திரு:ஏ.எம்.ஏ. எஸ் அமரசிங்க: இலங்கை சுங்கத்திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவின் உதவி அத்தியட்சகராகக் கடைமயாற்றும் அமரசிங்க அவர்கள் தலைமையில் பல வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான சட்டநடவடிக்கைகளையும் திணைக்களம் மேற்கொள்வதற்கு உதவியுள்ளார். அமரசிங்க அவர்கள் சுஙகத்திணைக்களத்திற்குக் கணிசமான அளவு வருமானம் ஈட்டுவதற்கு பங்காற்றியதுடன் பெறப்பட்ட வருமானமானது பொதுசேவையை வருத்திசெய்வதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
திரு. பிரபாத் சந்திரகீர்த்தி – கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளராக சேவையாற்றுகின்றார். திணைக்களத்தினூடாக வழங்கப்படும் அனுமதிப் பத்திரங்களை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்வதற்கான ஒரு முறைமையை இவர் உருவாக்கினார். வாடிக்கையாளர்கள் திணைக்கள அலுவலர்களை நேருக்கு நேர் சந்திப்பதானது இலஞ்ச ஊழலுக்கு வழிவக்கும் என்பதால் சந்திரகீர்த்தி அவர்கள் அவ்வாறான சந்தர்பத்தை தவிர்ப்பதற்காக இந்த இணையத்தள அனுமதி பத்திர முறையை உருவாக்கினார். இவர் தனது சேவைக் காலத்தின் போது நேர்மையாக கடமையாற்றிய ஒருவர்.
திரு.கே. குணநாதன் – திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றும் குணநாதன் அவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிராகவும், பிரதேச செயலகத்தின் மக்கள் சேவையை மேம்படுத்துவதற்காகவும் முன்னுதாரணமாக செயற்படுபவர். ஊழலை கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழினுட்பத்துடன் செயற்படுவது அவசியமென கருதிய அவர் பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்படும் பல்வேறு சேவைகளையும் இணையத்தள முறைமையூடாக விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை செயற்படுத்தினார். இவற்றைவிடவும், இலஞ்சம் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் பின்னிற்கவில்லை. வெருகல் பிரதேச மக்களின் சமூக பொருளாதார நலன்களுக்காகம் இவர் தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
டாக்டர். டீ. சத்தியமூர்த்தி – பணிப்பாளர் , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை . முறைகேடு மற்றும் ஊழலால் சுகாதாரத்துறை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு காணப்படுவதை அவதானித்த அவர் நோயாளிகளின் நலனை மேன்படுத்த ஒரு மருத்துவத்துறை நிர்வாகியாக தனித்து நின்று அயராது பாடுபடுகின்றார். அரச ஊழியர்கள் தமக்குரிய கடமைகளை செய்யாதிருப்பது ஒரு ஊழலாகுமென கருதும் சத்தியமூர்த்தி, கடமை நேரங்களில் தனியார் சிகிச்சை நிலையங்களில் பணியாற்றுவதற்கும் தடைவிதித்ததோடு வைத்தியசாலையின் சிறந்த சேவைக்கான பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருjhர். இவரது நடவடிக்கைகளினால் யாழ் போதனா வைத்தியசாலையில் சிறந்த வைத்திய சேவையை மக்களுக்கு வழங்கும் இவர் கௌரவத்திற்குரியவர்.