•  

     

     

     

    இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 மிக விரைவில்

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது கோவிட் தொற்றை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் நேர்மையாக பணியாற்றிய அரச ஊழியர்களை கெளரவிக்கு “இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2021” விருது வழங்கும் விழாயினை செவ்வாய்க்கிழமையன்று (11, ஜனவரி) கொழும்பில் அமைந்துள்ள BMICH மண்டபத்தில் நடாத்தியது.

இலங்கையில் கோவிட் 19 தொற்றினால் மரணித்தவர்கள் மற்றும் நாட்டில் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த போராடி கடமையின் போது தமது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்த முன்கள அரச ஊழியர்களை நினைவு கூரும் வகையில் ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு விழா ஆரம்பமானது.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கும் செயற்பாடானது உலகளாவிய அமைப்பான Accountability lab எனும் அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஓர் செயற்திட்டமாகும். இச்செயற்திட்டமானது மாற்றத்தை உருவாக்குபவர்கள் தமது சமூகத்தில் நேர்மையினை நிலைநிறுத்த அவசியமான சிறந்த யோசனைகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் ஆதரிக்கிறது. இவ் விருது வழங்கல் நிகழ்வானது தொடர்ச்சியாக 4ஆவது முறையாக நடைபெற்றது.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2021 ஆனது முன்னைய ஆண்டுகளை விட பல குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டிருந்தது. உலகளாவிய கோவிட் தொற்றால் நாம் இப்பொழுது வாழும் மாறுபட்ட சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கான இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) நிகழ்வானது கோவிட்-19 தொற்றுக்கு எதிராக பணியாற்றும் அரச ஊழியர்களை கெளரவிக்க அர்ப்பணிக்கப்பட்டது. தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமது கடமைகளுக்கு அப்பால் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றும் அரச ஊழியர்களை கௌரவிப்பதை இச்செயற்திட்டம் நோக்காக கொண்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருதுக்காக தெரிவு செய்யும் செயல்முறையானது 2021 ஜூன் மாதம் குறித்த தேர்வுக்காக நடுவர் குழாமினை நியமித்ததுடன் ஆரம்பமானது. அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் அரச முன்கள ஊழியர்களிடமிருந்து பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நுணுக்கமான படிமுறைகளூடாக இணையவழி மற்றும் நேரடி நேர்காணல்களைத் தொடர்ந்து பெறப்பட்ட 250 பரிந்துரைகளிலிருந்து இறுதியாக 10 அரச உத்தியோகத்தர்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

பின்வரும் அரச ஊழியர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான மகுடம் சூடும் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

C. நிஷாரி அனுருத்திகா டி சில்வா, கிராம உத்தியோகத்தர் – தம்பதுர, சீதுவ

Dr. ஹசித அத்தநாயக்க, பணிப்பாளர்- தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (IDH)

K.G கீதானந்த, ஆம்புலன்ஸ் சாரதி – பிரதேச வைத்தியசாலை, படபொல

நிம்மி ஜயசேகர, தொற்றுத் தடுப்புப்பிரிவு தாதி உத்தியோகத்தர், மாவட்ட பொது வைத்தியசாலை, எம்பிலிபிட்டிய

சண்முகராஜா சிவஸ்ரீ, பிரதேச செயலாளர் – தெல்லிப்பளை

அதேபோல்

Dr. இந்திக எல்லாவல, பொது சுகாதார வைத்திய அதிகாரி – சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிலியந்தலை

Dr. பிரனீத் தும்மாதுர, மாவட்ட வைத்திய அதிகாரி – கறந்தெனிய மாவட்ட வைத்தியசாலை

K.G.G.P.K. ரத்னாயக்க, பொது சுகாதாரப் பரிசோதகர் – பிரிவு 01, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கொழும்பு மாநகர சபை

Dr. நிசாந்த பத்மலால் வெதகே, பொது சுகாதார வைத்திய அதிகாரி – சுகாதார வைத்திய அதிகாரிபணிமனை, உடுகம

S.H அமீர், பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் – சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மூதூர்

ஆகியோர் முதல் பத்து இடங்களை பெற்றவர்கள் ஆவர்.

30 வருடங்களாக தனது நீண்ட பொதுச் சேவையில் பல பதவிகளில் சேவையாற்றிய விசேட ஆலோசக மருத்துவர் Dr. சரத் காமினி டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இறுதி 10 வெற்றியாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.

Dr. சரத் காமினி டி சில்வா அவர்கள் தனது உரையில் குறிப்பிடுகையில், “கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக பல சவால்களை எதிர்கொண்டு அவற்றை சிறப்பாக எதிர்கொண்ட விதமானது அவர்களின் நற்குணத்தை எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக பொது சுகாதார சேவைகளில் அவர்களின் நேர்மை, நாணயம் மற்றும் பலரின் வலுவான தார்மீக கொள்கைகளை மதித்து வழிநடாத்தப்படுவது பாராட்டுக்குரியதாகும்”.

“சகல மட்டங்களிலும் ஊழல் மலிந்து, வெளிப்படைத்தன்மை இன்றி, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டும் தண்டிக்கப்படாத நிலை காணப்படுகின்ற போது அரச ஊழியர்கள் நேர்மையான சேவையினை வழங்குவது மிகவும் கடினமான விடயமாகும். பொதுவாக சிறந்த பாராட்டத்தக்க சேவைகளுக்காக அவர்கள் கெளரவிக்கப்படுவதில்லை. இவ்வாறான மனிதநேய சேவையில் தம்மை அர்ப்பணித்து தமது சேவையினை மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளரவிக்கும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) செயற்திட்டமானது பாராட்டத்தக்க முயற்சியாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான நதிஷானி பெரேரா தனது உரையில், “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இந்த நேர்மையின் முன்மாதிரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும் ஊழலுக்கு எதிராக ஓர் அரச ஊழியர் எவ்வாறு தேசத்திற்காக ஓர் சிறந்த சேவையினை வழங்க முடியும் என்பதை நீருபித்துக் காட்டியுள்ளார்கள்” என குறிப்பிட்டார்.

“ஊழலை விட நேர்மை இன்னும் மேலோங்க முடியும் என்பதற்கு மிகவும் தேவையான நம்பிக்கையையும் ஊக்கத்தினையும் குறித்த நேர்மைக்கு மகுட வெற்றியாளர்கள் வழங்குகின்றனர்”.

நாட்டு மக்களின் நலனுக்காக தமது உயிரையும், தமது அன்புக்குரியவர்களின் உயிரையும் பணயம் வைத்து கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த முக்கிய பங்காற்றி வருகின்ற எமது முன்கள ஊழியர்களுக்கு நாம் எமது மரியாதையை செலுத்துகின்றோம். 2021 ஆம் ஆண்டிற்கான இன்டகிரிட்டி ஐக்கன்களாக (நேர்மைக்கு மகுட வெற்றியாளர்கள்) தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் நாட்டுக்காக நேர்மையுடன் தமது சேவைகளை முன்னெடுப்பார்கள் என்றும் நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓர் சிறந்த முன்மாதிரியாக திகழ்வார்கள் என்றும் TISL நிறுவனம் நம்புகிறது.

உலகளாவிய கோவிட் தொற்றால் நாம் இப்பொழுது வாழும் மாறுபட்ட சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு இவ்வாண்டு கோவிட் தொற்றுக்கு எதிராக பணியாற்றும் அரச ஊழியர்களை “கோவிடைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் கெளரவிக்கவுள்ளோம். தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமது கடமைகளுக்கு மேலதிகமாக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றும் அரச ஊழியர்களை கௌரவிக்க இம்முறை இன்டர்கிரிட் டிஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2021 முயல்கிறது. இப்போட்டிக்கான பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்கள் 2021 ஜூலை 19ஆம் திகதி தொடக்கம் 2021 செப்டம்பர் 06ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் நடுவர் குழாம் ஊடாக மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த பத்து போட்டியாளர்கள் இறுதி இன்டர்கிரிட்டி ஐக்கன்களாக தெரிவு செய்யப்படுவார்கள். தெரிவு செய்யப்பட்ட இறுதி போட்டியாளர்களின் கதைகள், அவர்களின் பின்னணி, அவர்களின் தொழிற் பணி, அவர்கள் கடந்து வந்த தடைகள், அவர்களின் செயற்பாட்டின் விளைவுகள் மற்றும் அவர்களின் அபிலாஷைகள் ஆகியவை ஊடகங்களில் பகிரப்படும்.

கோவிட்-19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமது கடமைகளுக்கு அப்பால் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பொது மக்களுடன் இணைந்து பணியாற்றும் அரச ஊழியர்கள் இன்டர்கிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) இற்கு பரிந்துரைக்க தகுதியானவர்கள். அவர்களுடைய செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் பிறருக்கு முன்மாதிரியாகவும் போற்றத்தக்கதாகவும் பிறரை அவ்வாறான செயற்பாடுகளுக்கு தூண்டக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

back to top